மௌனம்

மௌனம் ஓர் மொழியென்பதை

ஒப்புக்கொள்ளவில்லை நான்,

வார்த்தைகள் வறண்டு

விழிநீர் திரண்டு நிற்கும்

தருணம் கண்ட வரையில்!

இறப்பில் பிறப்பு!

பிறப்பின் போது

நான் அறிந்திருக்கவில்லை

இப்பிறப்பு நமக்கானதென்பதை!

இறப்பின் போது

நினைத்திருப்பேன் நான்-

உன் மடியில் உறைந்திடவே,

உன் விரல் சேர்த்திடவே,

உன் மூச்சில் இணைந்திடவே,

உன் விழி பார்த்து விடை பெறவே

உயிர் பெற்றேன் நானேன்று!!

உடனிரு!!!

உதிரத் துளிகள்

ஒன்றன் பின் ஒன்றாய்,

வறண்டு உறைந்து

உண்மையில் கனக்கிறது;

உற்றார் விளைவால்,

வழியின்றி உழல்வதால்,

உரியவனான உன்னை

உடைத்திடும் எனக்கு

வலி உணர்ந்தாலும்

வழி செய்ய விழையாததால்,

நீ உடன் இல்லாமல்

உதிரம் விளைவிக்கும்

வலியை உணர்கையில்,

உள்ளம் பதறுகிறது-உனக்கும்

அதே வலி உண்டென்பதால்!!!

கலர் கனவு!!!

வானம், கதிரவனின் கற்றைகொண்டு

அரிதாரம் பூசும் அதிகாலையில்,

உலகம், இயக்கம் தொடங்க

மெதுவாய் யத்தனிக்கும் அவ்வேளையில்,

அறை முழுக்க, குளிர்சாதனத்தின்

சன்னமான குளிரில் நிறைந்திருக்க,

போர்வைப் பொதியில் புதைந்து

உறக்கத்துடன் ஒன்றாய் பிணைந்திருக்க,

கருவிழி உருளா உறக்கத்தில்,

உவகை தரும் ஓர் கனவு;

பதட்டமில்லா பாதம் இரண்டு

வழவசப்பற்ற கரும்பொருள் மேல்,

உண்டான பரவசம் உணர்த்தியது-

பதிந்திருக்கும் பாதம் உனதும் எனதுமென;

விரல் இரண்டும் இயைந்திட

பார்க்கையில் புதியதாய் உத்வேகம்;

விழிகள் நான்கும் ஒரே திசையில்

காணும் காட்சி ஒன்றென்பதை காட்ட,

நிஜத்தில் இல்லா நட்சிரத்தை

கண்டதாய் உரைத்தோம்-

பொய் போல் உணரவில்லை,

பார்வையில் பல நட்சத்திரம் தெறித்ததால் ;

கனவு கருப்பு வெள்ளை ஆனாலும்,

வண்ணமாய் விரிகிறது,

நீ வருகையிலும்,

நாம் வாழ்கையிலும்!!!

கருமையில் ஒளிக்கீற்றாய் நீ!

தகிக்கும் வெப்பத்தில்,

சிலிர்ப்பூட்டும்

முதல் துளியாய்

உன் பார்வை!

 

வெடவெடக்கும் குளிரில்,

கதகதப்பூட்டும்

அழகிய அனலாய்

உன் புன்னகை!

 

அடர்ந்த காட்டில்,

ஒளியேற்றும்

கதிரவன் கற்றையாய்

உன் அரவணைப்பு!

 

கண்ணீர் தருணத்தில்,

துளிர்க்கும்

சிறு புன்னகையாய்

உன் வார்த்தை!

 

பயத்தின் உச்சத்தில்,

பிறந்திடும்

புது நம்பிக்கையாய்

உன் உறுதுணை!

 

எப்பொழுதும் எதிலும்,

நீ – கருமை படலத்தில்,

ஒளியேற்றும் கீற்றல்  தான், எனக்கு!!!

காதலுக்கு தேவை!!

கடைக்கண் பார்வையாம்;

கள்ளூறும் வார்த்தையாம்;

படபடக்கும் மனதாம்;

பருவத்தின் வயதாம்;

இவ்வனைத்தும் வேண்டுமாம்

காதலுக்கு;

இணைக்க வேண்டும்-

இடராத மனமும்,

இயல்பான பொழுதுகளும்,

கனிவான கவனமும்,

கள்ளமில்லா உரையாடலும்,

நிழலாய் வரும் நிதானமும்,

நெகிழ வைக்கும் தாய்மையும்

தேவை – கன்னியமான  காதலுக்கு!!!

உலகமெனும் ஓவியம்…!

தூரிகையில் வண்ணம் தொட்டு,

துளித்துளியாய் மெல்லத் தெளித்து,

தெளிந்த ஓர் ஓவியத்தை,

திறம்பட தந்தான் தூயவன்;

 

வழிந்திடும் வண்ணக் கலவையை,

வறண்டிடச் செய்கிறோம் நாம்;

 

மதியிழந்து, மதிக்க மறந்ததால்,

உருக்குலைக்கத் துடிக்கிறான் உருவாக்கியவன்;

 

உலகமெனும் ஓவியத்தை

ஒருமுறையேனும் உணர்ந்தால்,

மீட்டிடலாம் மாந்தரே

இறைவனின் இப்படைப்பை!!!